2025.‘நீண்ட மால் வரை மதி உற,
     நெடு முடி நிவந்த
தூண்டு மா மணிச் சுடர் சடைக்
     கற்றையின் தோன்ற,
மாண்ட வால் நிற அருவி அம்
     மழ விடைப் பாகன்
காண் தகும் சடைக் கங்கையை
     நிகர்ப்பன - காணாய்!1

     நீண்டமால் வரை - மிக உயர்ந்த பெரிய மலையிலே;  மதிஉற -
சந்திரன் வந்து  பொருந்த; நிவந்த நெடுமுடி- மிக உயர்ந்த அம் மலை
உச்சியிலே;  தூண்டும் மாமணிச் சுடர் -தூண்டி எரியவிடப்பட்டது
போலப் பிரகாசிக்கின்ற பெரிய மணிக் கற்களின் ஒளியானது; சடைக்
கற்றையின்தோன்ற -
சிவபிரானது சடைத் தொகுதியைப் போல விளங்க;
மாண்ட வால் நிற அருவி -(அம் மலை உச்சியிலிருந்து விழும்)
மாட்சிமை பொருந்திய வெண்ணிறம் படைத்த அருவியானது;  அம்
மழவிடைப் பாகன்
- அந்த இளமையான இடபத்தை ஏறிச் செலுத்துபவன்
ஆகிய சிவபிரானது;காண்தகும்- அழகு பொருந்திய; சடைக்கங்கையை-
சடை முடியில் உள்ளகங்கையை; நிகர்ப்பன- ஒத்திருப்பனவற்றை;
காணாய் -
பார்ப்பாயாக.

     மலை சிவபிரான். மதி பொருந்தல் சிவபிரான் பிறை சூடியது போலத்
தோன்றல்.செம்மணிச்சுடர் - செஞ்சடைக்கற்றை. வால்நிற அருவி -
சடையில் உள்ள கங்கை என உவமைகாண்க.                        7