2053.‘தொட்ட வார் சுனை, சுடர் ஒளி
     மணியொடும் தூவி
விட்ட சென்றன, விடா மத
     மழை அன வேழம்
வட்ட வேங்கையின் மலரொடும்
     ததைந்தன, வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய
     போல்வன - பாராய்!

     தொட்ட - (யானை) கைக்கொண்ட; வார்சுனை - நீண்ட சுனை நீர்;
சுடர் ஒளி மணியொடும் தூவி விட்ட சென்றன- (தம்மேல்) தூவிவிட்ட
ஒளி மிக்கமணிகளொடும் சென்றனவாகிய; விடா மத மழை அன
வேழம்
- விடாத மதநீர்ப் பெருக்கால்மழையோ எனக் கருதத் தக்க
யானைகள்; வட்ட - பாறை வட்டத்தில் உள்ள; வேங்கையின் மலரொடும்
ததைந்தன
- வேங்கைப் பூவின் பொன்னிற மலர்களொடும் கூடி
நெருங்கியமையால்;  வயங்கும் - விளங்கும்; பட்டம் - பொன்னாலும்
மணியாலும்இயன்ற பட்டம்;  நெற்றியில் சுற்றிய போல்வன - நெற்றியில்
சுற்றப்பட்டனபோல்வனவாய் உள்ளன; பாராய் - பார்ப்பாயாக.

     கனையின்கண் ஆடிய யானைகள் சுனை நீர் தூவிய மணிகளைத் தம்
நெற்றியில் கொண்டன; பின்னர்ப் பாறை வட்டத்தில் உள்ள பொன்னிறமான
வேங்கை மலர்கள் அந்நெற்றியில்நெருங்கிச் சேர்ந்தன. அதனால் நெற்றிப்
பட்டம் அணிந்தவை போலத் தோன்றின என்றது தற்குறிப்பேற்றவணியாம். 8