2058.‘வில்லி’ வாங்கிய சிலை எனப்
     பொலி நுதல் விளக்கே!
வல்லிதாம் கழை தாக்கலின்
     வழிந்து இழி பிரசம்,
கொல்லி வாங்கிய குன்றவர்
     கொடி நெடுங் கவலை
கல்லி வாங்கிய குழிகளை
     நிறைப்பன - காணாய்.

     வில்லிவாங்கிய சிலை எனப் பொலிநுதல் விளக்கே! -
வில்லுடைய வீரன் வளைத்தவில்போன்ற புருவத்தால் விளங்குகின்ற
நெற்றியை உடைய விளக்குப் போன்றவளே!;  வல்லிதாம்- கொடிகள்;
கழை கழை தாக்கலின் - மூங்கில் மோதுவதால்; வழிந்துஇழி பிரசம் -
தம்மிடத்துள்ள தேனடை கெட்டு இழிகின்ற தேனானது; கொல்லிவாங்கிய
குன்றவர் -
கொல்லிப் பண்ணைக் கேட்கி்ன்ற குறவர்கள்; நெடுங்கொடிக்
கவலை -
நீண்ட கொடிகளை உடைய கவலைக்
கிழங்கை;கல்லி -
தோண்டி; வாங்கிய - எடுத்த; குழிகளை- பள்ளங்களை; நிறைப்பன -
நிறைக்கும்  தன்மையை;  காணாய் - பார்ப்பாயாக.

     வில்லி - வேட்டுவருள் ஒரு சாதியினர் எனலும் ஆம். கொடிகளில்
கட்டப்பெற்ற தேனடையை மூங்கில்கள் மோதித் தாக்க அத்தேனடை
கெட்டுத் தேன்வழிந்து கவலைக் கிழங்கு அகழ்ந்த குழியைத் தூர்த்து
நிரப்பும் என்க. கொல்லிப்பண்மருதயாழ்த் திறமாதலின் மலை நிலத்தவர்க்கு
ஏலாதாயினும் இங்கே அப்பண் கேட்ட எனப்பொருள்படுத லன்றி
‘எழுப்பிய’ எனப் பொருள் படுதல் இன்று ஆதலின் அமையும் என்க. கொடி
நெடுங்கவலை - நெடுங் கொடிக் கவலை எனக் கொள்ளப்பட்டது.      13