2060. | ‘வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே! சீறு வெங் கதிர் செறிந்தன போர்கல, திரியா மாறு இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணிக்கல் - பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது - பாராய்! |
வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே! - மிகச் சிறந்த பஞ்சினால்ஆகிய திரியில் தேவர் அமிழ்தமாகிய நெய்யை ஊற்றி ஏற்றப்பட்ட விளக்குப் போன்றவளே; சீறு வெம் கதிர் செறிந்தன - இருளைச் சீறி அழிக்கின்ற வெம்மையான ஒளி செறிந்தனவும்;போகல - (தம் இடத்தை விட்டு எப்பொழுதும்) நீங்காதனவும்; திரியா - சுற்றி இயங்காதனவும் ஆகிய; மாறு இல் மண்டிலம் நிரம்பிய - வேறுபடுதல் இல்லாத வட்டமாக நிரம்பிய; மாணிக்க மணிக்கல் பாறை - மாணிக்க மணியால் ஆகிய கற்பாறைகள்; மற்று ஒரு பரிதியின் பொலிவது - வேறு ஒரு சூரியன் போல விளங்குவதை; பாராய்-. ‘அமுத நெய்’ என்றது பிராட்டியின் சிறப்புக் கருதி. பிராட்டியைச் சிறப்பித்துக் கூறும்இடங்களில் அமுதத்தை எடுத்துக் காட்டல் கம்பர் வழக்கு. “ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து”“தேவு தெண்கடல் அமிழ்து கொண்டு” (483, 5079.) என்பன ஒப்பு நோக்கத் தக்கன. சூரியனுக்கும், மாணிக்க மணிக் கற்பாறைக்கம் ஒற்றுமை கூறியவர், பெயர்ந்து திரியும் சூரியன் போல்அன்றி, பெயர்ந்து திரியாது மாணிக்க மணிக்கல் பாறை என்று வேறுபாடும் கூறினார்.வேற்றுமையணி. 15 |