2062.‘வில் கொள் வாள் நுதல், விளங்கு இழை,
     இளந் தளிர்க் கொழுந்தே!
எல் கொள் மால் வரை உம்பரின்,
     இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து
     எறி குருவிந்தக்
கற்கள், வானிடை மீன் என
     வீழ்வன - காணாய்.!

     வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை,  இளம் தளிர்க்
கொழுந்தே!
- வில்லாகியபுருவத்தைக் கொண்ட ஒளிபடைத்த
நெற்றியையும்,  விளங்கிய அணிகலன்களையும் உடைய, இளையதளிரின்
கொழுந்து  போன்றவளே!;   எல் கொள் மால் வரை  உம்பரின் -
சூரியனைக்கொண்ட பெரிய மலையின் உச்சியில்; இரும் புனம் காக்கும்-
பெரிய தினைப்புனத்தைக் காக்கின்ற;  கொல்கொள் வேல் கணார் -
கொலைத்தெரிழில் கொண்ட வேல்போன்ற கண்களை உடையவர்களாய
குறமகளிர்; குரீஇ இனத்து  எறி - (தினையைக் கவரவருகின்ற) குருவிக்
கூட்டத்தின்மேல் வீசி எறிகின்ற; குருவிந்தக் கற்கள் -(செந்நிறம் உடைய)
குருவிந்த மணிக் கற்கள்; வானிடை - ஆகாயத்தில்; மீன் என -
நட்சத்திரம் போல;  வீழ்வன - விழுவனவற்றை; காணாய் -.

     குருவிந்தம் - ஒருவகை மாணிக்கக் கல்;  செந்நிறம் உடையது.
“பதுமமும் நீலமும் விந்தமும்படிதமும்” என்ற சிலப்பதிகார  (மதுரைக்.
ஊர்காண். 186 -7.) அடிகளுக்கு, ‘விந்தம் -குருவிந்தம்’ இரத்தவிந்து
என்பதும் அது;...... ‘திலகமுலோத்திரம் செம்பருத்திப்பூக்களின்மலர் குன்றி
முயலுதிரமமே,  சிந்துரம் குக்கில் கண் என எட்டும், எண்ணிய குருவிந்தம்
கண்ணியநிறமே’  என்ற அடியார்க்கு நல்லார் உரையானும் உணரலாம்.  17