2064. | ‘நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும் சோனை வார் குழற் சுமை பொறாது இறும் இடைத் தோகாய்! வான யாறு மீன் மலர்ந்தன எனப் புனல் வறந்த கான யாறுகள் கதிர் மணி இமைப்பன - காணாய்! |
நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும் சோனை வார் குழல்சுமை பொறாது - புழுகு, அன்றலர்ந்த மலர், மணப் பொருள், அகிற்புகை, கத்தூரி, தேன்இவற்றைப் பெற்று மணம் வீசும் திரண்ட நீண்ட கூந்தல் பாரத்தைத் தாங்க மாட்டாமல்; இறும் இடைத்தோகாய் - ஓடிகின்ற இடையினை உடைய மயில் போன்றவளே!; வான யாறு - வான வழியில்; மின் மலர்ந்து என - நட்சத்திரங்கள் தோன்றின என்னும்படி; புனல் வறந்த கான யாறுகள் - நீர் வற்றிப் போன காட்ாறுகளில்; கதிர் மணி இமைப்பன- ஒளியுடைய மணிகள் விட்டு விளங்குகின்றவற்றை; காணாய் -. நானம் முதலியன கூந்தலுக்கு ஊட்டும் மண விசேடமாம். வான யாறு- தேவகங்கை என உரைத்து அதில் வண்ண மீன்கள் போல எனலும் ஆம். 19 |