2068.‘அடுத்த பல் பகல் அன்பரின்
     பிரிந்தவர் என்பது
எடுத்து நம்தமக்கு இயம்புவ எனக்.
     கரிந்து இருண்ட
தொடுத்த மாதவிச் சூழலில்,
     சூர் அரமகளிர்
படுத்து வைகிய பல்லவ
     சயனங்கள் - பாராய்!

     தொடுத்தமாதவிச் சூழலில் - அடர்த்தியாக உள்ள குருக்கத்திக்
கொடியால் ஆகியபந்தரில்; சூர் அரமகளிர் படுத்து வைகிய-
(தலைவரைப் பிரிந்த) தெய்வத்தன்மை உடையஅரமகளிர் உறங்கியனவும்;

அன்பரைஅடுத்த பல்பகல் பிரிந்தவர் என்பது  நம்தமக்கு எடுத்து
இயம்புவது என
- தம் இனிய காதலரைத் தொடர்ந்து  பற்பல நாள்கள்
பிரிந்தவர்கள் என்பதனை நமக்கு எடுத்துச்சொல்லுவது  போல;  கரிந்து
இருண்ட -
(பிரிவினால் ஆகிய விரகத் தீயால்) தீய்ந்துஇருள் நிறமாகிய;
பல்லவச் சயனங்கள் - தளிர்ப் படுக்கைகளை; பாராய் -.

     மாதவி - குருக்கத்தி (ஒருவகைக் கொடி); தலைவரைப் பிரிந்த மகளிர்
உடல் வெப்பத்தைஆற்ற மென்மையான தளிர்ப் படுக்கையில் படுத்தனர்.
பிரிவு நீண்ட நாள் ஆதலின்அப்படுக்கைகளும் கரிந்து  தீய்ந்துள்ளன
என்றதாம்.                                                   23