2076.‘பாந்தள், தேர் இவை பழிபடப்
     பரந்த பேர் அல்குல்!
ஏந்து நூல் அணி மார்பினர்
     ஆகுதிக்கு இயையக்
கூந்தல் மென் மயில் குறுகின
     நெடுஞ் சிறை கோலி,
காந்து குண்டத்தில் அடங்கு எரி
     எழுப்புவ - காணாய்!1

     பாந்தன்தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல் - பாம்பின்
படமும், தேர்த்தட்டும் என்ற இவை உவமை ஆகாமல் பழிப்பை
அடையும்படி அகன்ற பெரிய அல்குலை உடையவளே!; கூந்தல்
மென்மயில் -
தோகையை உடைய மெல்லிய மயிற்பறவைகள்;  குறுகின-
அணுகினவாய்; நூல் ஏந்து அணி மார்பினர்ஆகுதிக்கு  இயைய -
பூணூலைத் தாங்கிய அழகியமார்பினை உடைய அந்தணர்களது
வேள்விக்குப் பொருந்த; நெடுஞ்சிறை கோலி -நீண்டதம் சிறகுகளை
வளைத்து;  காந்து குண்டத்தில் - வெம்மையுள்ள ஓமகுண்டத்தில்;
அடங்கு எரி -அடங்கிய நெருப்பை;  எழுப்புவ- எரியச் செய்கின்றன;
காணாய் -

     இச்சித்திரகூட மலையில் உள்ள மயில்கள் அந்தணர் ஓமகுண்டத்தில்
நெருப்பைத் தம் சிறகால் விசிறி எரியச் செய்து உதவுகின்றன.          31