2080.‘இடி கொள் வேழத்தை எயிற்றொடும்
     எடுத்து உடன் விழுங்கும்.
கடிய மாசுணம், கற்று
     அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர், தாழ்வு
     இலர் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை
     கிடப்பன - பாராய்!

     இடி கொள் வேழத்தை - இடி போலப் பிளிறுதல் கொண்ட
யானையை; எறிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் கடிய மாசுணம் -
தந்தத்தோடு ஒருசேரத் தூக்கிவிழுங்கி விடக்கூடிய கொடிய மலைப் பாம்பு;
கற்று அறிந்தவர் - நூற்பொருளைக் கற்றுத்தெளிந்தவர்;  என - போல;
அடங்கி - அடக்கம் உடையதாய் (தம் ஆற்றலைஒடுக்கிக் கொண்டு);
சடை கொள் சென்னியர் - சடா முடியை  உடைய முனிவர்கள்; தாழ்வு
இலர் -
சரிதல் இல்லாதவராய்;  தாம் மிதித்து  ஏற - தாமே மலையின்
மேல் மிதித்து ஏறிச் செல்லும்படி;  படிகளாம் என - படிக்கற்களைப் போல;
தாழ்வரை- மலை அடிவாரங்களில்;  கிடப்பன - கிடக்கின்றவற்றைப்;
பாராய் -.

     ஆற்றல் சான்ற மலைப்பாம்புகள் அடங்கி இருத்தலுக்குக்
கற்றுணர்ந்தவர் அடக்கம்உவமையாகும். ‘தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின்
இறைஞ்சி’ என்ற சிந்தாமணியை  இங்குக்(நாமகள் - 53) கருதுக.  மலைப்
பாம்புகளும் படிகளாகக் கிடந்து  முனிவர்கள் தாழாது  மலையேற
உதவுகின்றன என்றவாறாம்.                                      35