இராமன் முதலிய மூவரும் மாலை வழிபாடு செய்தல் 2087. | மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில; மை அரு நறு மலர் மலர்ந்தவாம் சில; ஐயனோடு, இளவற்கும் அமுதனாளுக்கும் கைகளும், கண்களும், கமலம் போன்றவே. |
மொய்உறு நறு மலர் சில முகிழ்த்தவாம்- (மாலையில்) நெருங்கிப் பொருந்தியமணமுள்ள மலர்கள் சில குவிந்தன; மை அறு நறுமலர் சில மலர்ந்தவாம்- குற்றமற்றமணமுள்ள மலர்கள் சில மலர்ந்தன; ஐயனோடு- இராமனோடு; இளவற்கும் - இலக்குவனுக்கும்;அமுதனாளுக்கும்- அமுதத்தை ஒத்த சீதைக்கும்; கைகளும் கண்களும் கமலம்போன்ற- கைகளும், கண்களும் மாலைக் காலத்துத் தாமரைகள் குவிந்திருப்பது போல்குவிந்து மூடிக்கொண்டன. மாலையிற் சில மலர் குவிதலும், வேறுசில மலர்தலும் இயல்பு - வழிபாடு செய்வார் கண்களைமூடிக் கைகளைக் குவிப்பர் ஆதலின், இங்கு மாலைக்காலத்துத் தாமரை குவிந்திரப்பது போலக்கைகளும், கண்களும் ஆயின என்று குறிப்பால் அதனைப் புலப்படுத்தினர். ஏகாரம் ஈற்றசை. 42 |