இலக்குவன் அமைத்த சாலை 2089. | நெடுங் கழைக் குறுந் துணி நிறுவி, மேல் நிரைத்து, ஒடுங்கல் இல்நெடு முகடு ஒழுக்கி, ஊழுற இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும் முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே. |
நெடுங் கழைக் குறுந்துணி நிறுவி மேல் நிரைத்து - நீண்ட மூங்கில்களின் சிறியதுண்டுகளை நிறுத்தி மேலே வரிசையாக அமைத்து; ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி-வளைதல் இல்லாத நீண்ட தூலத்தை நேராக நிறுத்தி; ஊழ் உற இடுங்கல் இல் கை ஏற்றிவிசித்து - முறையாகப் பொருந்தக் கீழே தாழ்தல் இல்லாத பக்கக் கழிகளை மேல் ஏற்றி நன்கு இறுக்கிக் கட்டி; முடங்கல் இல் வரிச்சுமேல் - வளைதல் இல்லாத அந்தக் கட்டியவரிச்சுக்களின் மேலே; எங்கணும் - எவ்விடத்தும்; விரிச்சு மூட்டி -விரித்து மூடு செய்து. நீளக்கழி, குறுக்குக் கழிகள், தூலம் முதலியன கூரை வேய்வதற்கு முன் கட்டப் பெறுவன. விரிச்சு - விரித்து. ஏகாரம் ஈற்றசை. 44 |