இராமன் சாலையில் உவந்திருத்தல்  

2094.மாயம் நீங்கிய, சிந்தனை, மா மறை,
தூய பாற்கடல், வைகுந்தம், சொல்லல் ஆம்
ஆய சாலை, அரும் பெறல் அன்பினன்,
நேய நெஞ்சின் விரும்பி, நிரம்பினான்.

     மாயம்நீங்கிய சிந்தனை - உலக மாயையிலிருந்து விடுபட்ட
ஞானிகளது தெளிந்தமனம்; மா மறை - பெரியவேதம்; தூய பாற்கடல்-
(வியூகத்தில் தான்எழுந்தருளி இருப்பதாகிய) தூய்மையான
திருப்பாற்கடல்;
வைகுந்தம் - (நித்ய சூரிகள் என்றும் வாழ்வுக்கும்இருப்பாகிய)வைகுந்தம்;
என்று சொல்லல் ஆம் ஆய - என்று சொல்லுதற்குப்பொருந்தியதாகிய;
சாலை - சாலைக்கண்; அரும்பெறல் அன்பினன் - பெறலரும்
அன்புடையனாகியஇராமபிரான்; நேய நெஞ்சின்- தனது அன்புள்ளத்தால்;
விரும்பி -மகிழ்ச்சி அடைந்து; நிரம்பினான்- நிறைவடைந்தான்.

     இராமன் குடிபுகுந்த காரணத்தால் திருமாலாகிய பரம் பொருள்
வீற்றிருக்கும் இடங்களாக அச்சாலை ஆகியது.                     49