இலக்குவன் மறுமொழி 2098. | அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும் நொந்த சிந்தை இளையவன் நோக்கினான். ‘எந்தை! காண்டி, இடரினுக்கு அங்குரம் முந்து வந்து முளைத்தது அன்றோ’ என்றான் |
ஐயன் - இராமன்; அந்த வாய்மொழி இயம்பலும் - அந்த உள்ளம் கலந்தசொற்களைக் கூறிய அளவில்; நொந்த சிந்தை இளையவன் நோக்கினான் - வருந்தியமனத்தை உடைய இலக்குவன் (அச்சொற்களின் பொருளை) மனத்தின் கருதி; ‘எந்தை! -என் தந்தை போல்பவனே?; காண்டி - நான் சொல்வதை ஆராய்ந்து பார்ப்பாயாக; இடரினுக்கு - உன் துன்பத்துக்கு; அங்குரம் - முளையானது; முந்தி வந்து முளைத்தது அன்றோ’ - நீ மூத்தவனாகப் பிறந்து தோன்றியதனால் உண்டாகியதல்லவா? என்றான்- என்று வருந்திக் கூறினான். இராமன் வருந்திக் கூறியது கேட்ட இலக்குவன் ‘நீ மூத்தவனாகப் பிறந்ததனாலேயே வனவாசமாகிய துன்பத்தை அனுபவிக்க வேண்டியவனாக ஆகிவிட, உனக்குப் பணிவிடை செய்வதில் உவப்பாய் இருக்கும் எனக்குத் துன்பம் இழைத்ததாக நீ சொல்வது சரியாகுமா?’ என்று கேட்பது போல இலக்குவன் மறுமொழி கூறினான். ‘எனக்கு இது மகிழ்ச்சி தருவது’ உன் துன்பமே பெரிது’ என்றானாம். இனி, இவ்வாறன்றி ‘உன்னால் எனக்குத் துன்பம் பெரிது உண்டாகவில்லை; துன்பத்துக்கு முளை முன்னாலேயே கைகேயியாகிய என் தாய் பெற்ற வரத்தால் வந்து தோன்றிவிட்டது அல்லவா? இதனால் நீ நெடுநாள் எனக்குத் துன்பம் இழைத்ததாகக் கருதி வருந்துதல் சரியன்று’ என்றானாகக் கூறுதல் பொருந்தும். ஆயினும், அது இலக்குவன் தான் துன்பம் உறுவதாகக் கூறுவதாகப் பொருள் படும். ஆதலின், பொருந்துமாறு அறிக. பொதுவாக இத்துன்பத்துக்கெல்லாம் காரணம் நின்னால் ஆகியதன்று; முன்னரே தயரதன் கைகேயிக்கு வரம் தந்ததனால் உண்டாகியதே. இதற்கு நீ வருந்துதல் தகாது’ என்றானாகவும் கூறலாம். 53 |