இலக்குவனுக்கு இராமன் ஆறுதல் கூறல் 2099. | ‘ஆக, செய்தக்கது இல்லை’ அறத்தினின்று ஏகல் என்பது அரிது’ என்றும் எண்ணினான் ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான் ‘சோக பங்கம் துடைப்பு அரிதால்’ எனா, |
ஆக - அப்படியே இருக்கட்டும்; செய்தக்கது இல்லை - (துன்பத்துக்குப்பரிகாரமாகச்) செய்யக்கூடியது எதுவும் இல்லை; அறத்தினின்று ஏகல் என்பது அரிது -தருமத்திலிருந்து விலகிச் செல்வது என்பது நம் போன்றார்க்கு இயலாது; என்று எண்ணினான்- என்று தன் மனத்தில் (இராமன்) கருதினான்; ஓகை கொண்டவன் - (தனக்குத்தொண்டு செய்தலில்) மகிழ்ச்சி கொண்ட இலக்குவனின்; உள் இடர் - மனத்துன்பத்தை;நோக்கினான் - பார்த்து; சோக பங்கம் - இவ் இளையவனது துன்பத்தால்ஏற்பட்ட மனச் சோர்வு; துடைப்பு அரிதால்’ - போக்குவது இயலாது; எனா -என்று கருதி. ‘ஆக’ என்பது உரையசை. ‘ஆல்’ அசை. 54 |