2100. | பின்னும், தம்பியை நோக்கி, பெரியவன், ‘மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு’ இதற்கு என்ன கேடு உண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை உன்னு, மேல் வரும் ஊதியத்தோடு’ என்றான். |
பெரியவன் - இராமன்; பின்னும் - மறுபடியும்; தம்பியை நோக்கி- இலக்குவனைப் பார்த்து; ‘மன்னும் செல்வத்திற்கு - (உலகில்) பெறும் பொருட்செல்வத்திற்கு; வரம்பு உண்டு - இவ் வளவு என்று ஒரு எல்லை உண்டு; இதற்கு -இந்த வனவாசத் தவம் ஆகிய செல்வத்துக்கு; என்ன கேடு உண்டு?- என்ன அழிவு உண்டு; இவ் எல்லை இல்இன்பத்தை மேல் வரும் ஊதியத்தோடு உன்னு’ - இந்த அளவுபடாத அழிவுபடாத இன்பவாழ்க்கையைமறுமையில் இத்தவத்தால் பெறும் நற்கதியாகிய இலாபத்தோடு சேர்த்து நினைப்பாயாக;’ என்றான்-. அரசச் செல்வம் அழிவுடையது; அளவு உடையது. ஆனால், தவச் செல்வமோ அழிவற்றது;அளவற்றது; மறுமைக்கும் பயன் தரவல்லது. ஆகவே அரச போகத்தைவிட, வனவாசமே எனக்கு மகிழ்ச்சி தருவது ஆதலின், எனக்குத் துன்பம் விளைந்ததாகவே நான் கருதவில்லை; அதனை நினைத்து நீதுன்புறுவானேன்’ என்றானாம் - இது ‘இடரினுக்கு அங்குரம் முந்தி வந்து முளைத்தது அன்றோ’ என்றுஇலக்குவன் கூறிய சொற்களுக்குப் பதில் போல் அமைந்து ஆறுதல் தருவதாயிற்று. 55 |