தூதுவர் பரதனிடம் தம் வருகையை அறிவித்தல்  

கலிவிருத்தம்

2102.பொரு இல் தூதுவர் போயினர், பொய் இலார்;
இரவும் நன் பகலும் கடிது ஏகினார்;
பரதன் கோயில் உற்றார், ‘படிகாரிர்! எம்
வரவு சொல்லுதிர் மன்னவற்கே!’ என்றார்.

     பொற்இலார்,  பொரு இல் தூதுவர் - உண்மை  உள்ளவர்களும்
தமக்கு வேறு ஒப்புஇல்லாதவர்களும் ஆகிய தூதர்; போயினர்-
(அயோத்தியிலிருந்து) சென்றார்கள்;  இரவும்நன்பகலும் - இரவிலும்
நல்ல பகலிலும்; கடிது - (ஓய்வில்லாமல்) விரைந்து;  ஏகினார்-
சென்றார்கள்;  பரதன் கோயில் உற்றார்- பரதன் தங்கியுள்ள (கேகய
நாட்டு)அரண்மனையை அடைந்தார்கள்; ‘படிகாரிர்! -வாயில்
காவலர்களே!;  மன்னவற்கு -பரதனுக்கு;  எம்வரவு சொல்லுதிர் -
(அயோத்தியிலிருந்து  வந்திருக்கின்ற) எம்வருகையைத் தெரிவியுங்கள்;’
என்றார் - என்று சொன்னார்கள்.

     உள்ளதை உள்ளவாறே சொல்லுதல், ஏவியவர் கூறியதை, அனுப்பிய
செய்தியை மாற்றாது உரைத்தல் என்பன தூதர் இயல்பு, ஆதலின்,  ‘பொய்
இலார்’ என்றார். ‘படிகாரிர்’ என்பது‘பரதீஹாரர்’ என்னும் வடசொல்
திரிந்து  ஆகிய சொல். ‘காரர்’ என்பது ‘காரிர்’ எனவிளியேற்றது. ‘ஏ’
பிரிநிலை; பரதனுக்கே தெரிவிக்க வேண்டும் ஏனையோர்க்கன்று எனலின்,. 1