திருமுகம் கொணர்ந்த தூதர்க்குப் பரதன் பரிசு அளித்தல்  

217.சூடி, சந்தனம் தோய்த்துடைச் சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்த்தனன்;
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்குக்
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன்.1

     சூடி-(திருமுகத்தைத்) தலையிற் சூடிய பின்னர்; சந்தனம்
தோய்த்து
- (மேலே) சந்தனம்பூசி; சுற்றுமண் மூடு உடை-
சுருட்டப்பெற்று அரக்குமண் வைத்து (முத்திரை இட்டு) மூடுதல் உடைய;
தோட்டின் முடங்கல்- பனை ஓலையால் ஆகியகடிதத்தை;
நிமிர்த்தனன்- நீட்டிப் (பிரித்து)பார்த்தான்; ஈடு- (அத் திரு முகத்தில்)
இடப்பெற்ற செய்தியை; நோக்கி- பார்த்து(வாசித்து); வந்துஎய்திய
தூதர்க்கு
- (அத் திருமுகத்தை) கொண்டு வந்து தன்னைச் சந்தித்து
தூதுவர்க்கு; கோடி மேலும் நிதியம்- கோடி
அளவிற்கு மேற்பட்ட
செல்வங்களை; கொடுத்தனன்- (பரதன்) பரிசாகஅளித்தான்.

     நல்ல செய்தியைத் தாங்கிய தோற்றம் காட்டுதற்குச் சந்தனம்
பூசப்பெற்றது.  பனைஓலையைச் சுருட்டி முத்திரை இட்டு அனுப்புதல்
வழக்கம். சுருட்டுதலின் ‘முடங்கல்’ என்றுதிருமுகத்துக்கு ஒரு பெயர்,
வாசிப்பார் முதலில் சுருளைப் பிரித்து நீட்ட வேண்டுதலின்‘நிமிர்த்தனன்’
என்றார். இடப்பெற்றது ‘ஈடு’. ஓலையில் இடப்பெற்ற செய்தி என்பது பொருள்.

     கோசல நாட்டில் நிகழ்ந்த அவலச்செய்தி எதுவும் இல்லாத திருமுகவே
அனுப்பப்பட்டது.முடிசூட்டு விழாவாகிய நற்செய்தியும் அதில் இல்லை.
வசிட்டரின் ராஜதந்திரம் எவ்வாறு சொல்அமைத்தது  என்ற குறிப்பினைக்
கவிஞர் தரவில்லை. துயர் ஊட்டாமல்  பரதனை வரவழைக்கவேண்டும்
என்பதொன்றே மன்னன் சார்பில் செயல்பட்ட முனிவரின் நோக்கம்.      6