பரதனோடு சென்ற சேனையின் எழுச்சி 2110. | யானை சுற்றின; தேர் இரைத்து ஈண்டின; மான வேந்தர் குழுவினர்; வாளுடைத் தானை சூழ்ந்தன; சங்கம் முரன்றன; மீன வேலையின் விம்மின, பேரியே. |
(பரதன்சென்ற போது) யானை சுற்றின- யானைகள் சூழ்ந்து சென்றன; தேர் இரைத்துஈண்டின- தேர்கள்மணி ஒலித்து நெருங்கிச் சென்றன; மான வேந்தர் குழுமினர்- பெருமையுடையஅரசர்கள் திரண்டு சென்றனர்; வாள் உடைத் தானை சூழ்ந்தன-வாள் முதலிய கருவிகளை ஏந்தியசேனா வீரர்கள் சுற்றிச் சென்றனர்;சங்கம் முரன்றன-சங்குகள் ஒலித்தன; பேரி மீன வேலையின் விம்மின- பெருமுரசுகள் மீனுடைய கடல் ஒலிபோல முழங்கின. சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆதலின் எங்குச் செல்லினும் சேனையோடு செல்லுதல்அவர்க்கு இயல்பு ஆதலின் படை எழுச்சியும் கூறற்பாலதாம். சுற்றின, ஈண்டின, சூழ்ந்தனஎனவும், முரன்றன, விம்மின எனவும் சொற்களை மாற்றியமைத்த அழகு இன்பம் பயப்பது. 9 |