2111.கொடி நெருங்கின; தொங்கல் குழீஇயின;
வடி நெடுங் கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின; பூண் ஒளி பேர்ந்தன,
இடி துவன்றின மின் என, எங்குமே.

     (அச்சேனை எழுச்சி எங்கும்) கொடி நெருங்கின - கொடிகள்
நெருங்கி வந்தன; தொங்கல்குழீஇயின- பீலிக்குஞ்சம் எனப்படும்
தொங்கல் திரண்டு வந்தன;வடி நெடுங்கண் மடந்தையர்-மாவடுப்
போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர்; ஊர் மடப்பிடி- ஏறிச்
செலுத்துகின்ற இளையபெண் யானைகள்; துவன்றின- நெருங்கிச்சென்றன;
பூண் ஒளி- (அம்மகளிர் அணிந்த)கலன்களின்ஒளி; இடி துவன்றின மின்
என
- இடியொடு நெருங்கிய மின்னலைப்போல; எங்கும்பேர்ந்தன-
எல்லா இடங்களிலும் விட்டு விளங்கின.

     இம் மகளிர் அரச மகளிர்; போர்க்குச் செல்லாத சேனைகள் ஆதலின்,
வடி - மாவடு; கூர்மை எனப் பொருள்கூறலும் ஒன்று.  அணிகள் ஒளியும்,
ஒலியும் விட்டு விட்டு நிகழ்தலின் ‘இடிதுவன்றின மின’ என உவமை கூறப்
பெற்றது எனலாம். தொங்கல் - பிச்சம் எனப்பெறும், ‘ஏ’ஈற்றசை.       10