2112. | பண்டி எங்கும் பரந்தன; பல் இயம் கொண்டு இயம்பின கொண்டலின்; கோதையில் வண்டு இயம்பின; வாளியின் வாவுறும், செண்டு இயங்கு பரியும் செறிந்தவே. |
பண்டி-வண்டிகள்; எங்கும் பரந்தன- எல்லாவிடங்களிலும்பரவிச் சென்றன; பல்இயம்- பலவகையான வாத்தியங்கள்; கொண்டலின் கொண்டு இயம்பின- மேக முழக்கத்தைப்போல ஒலிகொன்டு ஒலித்தன; கோதையில்- மைந்தரும் மகளிரும் சூடிய மாலையில்; வண்டுஇயம்பின- வண்டுகள் ஒலித்தன; செண்டு இயங்கு- வையாளிவீதியில் உலாவுகின்; வாளியின் வாவுறும் பரியும்- அம்பைப்போலவிரைந்து செல்கின்ற குதிரையும்; செறிந்த - நெருங்கிச் சென்றன. சேனைகள் செல்லுதலின் உணவு முதலிய உடன் கொண்டு செல்லும் வண்டிகள் எங்கும்பரந்தனவாம். செண்டு வட்ட வடிவமாக அமைத்த மைதானம். இதனைச் செண்டு வெளி என்பது அக்காலவழக்கு. 11 |