2116.நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில்,
‘பறந்து போதும்கொல்’ என்று, பதைக்கின்றார்,
பிறந்த, தேவர், உணர்ந்து, பெயர்ந்து முன்
உறைந்த வான் உறுவார்களை ஒக்கின்றார்.

     நெருங்கினர் நிறைந்த மாந்தர்- ஒருவரோடு ஒருவர் நெருங்கிய
அறிவால் நிறைந்த மக்கள்; நெஞ்சினில்- தம் மனத்தில்; ‘பறந்து போதும்
கொல்’ என்று
- பறந்து சென்று விடுவோமா (அயோத்திக்கு) என்று கருதி;
பதைக்கின்றார்- துடிக்கின்றார்;(இவர்கள்) தேவர்- தேவர்கள்; பிறந்து-
சாபத்தால் மண்ணிற் பிறந்து; உணர்ந்து - பாச நீக்கத்தால் (அறிவுணர்ந்து)
தாம் தேவர் என அறிந்து; பெயர்ந்து - இம்மண்ணுலகை விட்டு நீங்கி; முன்
உறைந்த வான்
- தாம் முன்பு வாழ்ந்த தேவருலகை; உறுவார்களை -
அடைய விரைகின்றவர்களை; ஒக்கின்றார்- ஒப்பவராய் உள்ளார்கள்.

     சாப நீக்கம் தேவர்கள் தம் வான் உலகு செல்லத் துடித்தலும்
விரைதலும் பரதன் உடன் செல்வார் அயோத்திக்கு விரைந்து செல்லத்
துடித்தலுக்கு உவமை. இவர்களின் பதைப்பையும் விரைவையும் ‘பறந்து
போதும்’ என்பது விளக்கும். ‘கொல்’ ஐயம்.                          15