2117. | ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத் தான் அளைந்த தழுவின, தண்ணுமை, தேன் அளைந்து செவி உற வார்த்தென, வான் அளைந்தது, மாகதர் பாடலே. |
மாகதர்-மாகதர்களின் பாடல்; தேன் அளைந்து - தேனோடு கலந்து; செவி உற வார்த்னெ- செவியிற்பொருந்தும்படி (செவித் கினிமையாக) சொரிந்தாற் போன்றனவாகி; வான் அளைந்தது- வானுலகுவரை சென்று பரவியது; தண்ணுமைதான்- மத்தள வொலிதான்; ஊன் அளைந்த உடற்கு- ஊனொடுகலந்த உடலுக்கு; உயிர் ஆம் என- பொருந்திய உயிர் போல(உடல் முழுவதும் உயிர் பரவியிருப்பது போல); அளைந்து- அப்பாடல்ஒலியோடு இரண்டறக் கலந்து; தழுவின- இணைந்து நின்றன. மாகதர் - இருந்து ஏத்துவார். அரசரை ஏத்திப்பாடும் இயல்பு உடையாடர் மூவர். சூதர், மாகதர், வேதாளிகர் என்பார். இவரை முறையே நின்றேத்துவார், இருந்து ஏத்துவார், கிடந்து ஏத்துவார் என்பது வழக்கம். அவருள் இவர் மாகதர் ஆதலின் இருந்து ஏத்துவார். தண்ணுமை ஒலியும், பாடல் ஒலியும் ஒன்றையொன்று இணைதலுக்கு உடல் - உயிர் இணைப்பை உவமையாகினார் - தண்ணுமை என்பது இங்கு அதன் ஒலியைக் குறித்து நின்றது. ‘ஏ’ ஈற்றசை. 16 |