2118. | ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை வீறு கொண்டன, வேதியர் வாழ்த்து ஒலி; ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை மாறு கொண்டன, வந்திகர் வாழ்த்து அரோ! |
ஊறுகொண்ட-(குறுந்தடியால்) அடிக்கப்படுகின்ற; முரசுஉமிழ் ஓதையை-முரசம் வெளிவிடும் பேரொலியை; வேதியர்-வேதம் வல்ல அந்தணர் (கூறும்); வாழ்த்துஒலி- வாழ்த்தும்ஒலியானது; வீறு கொண்டன-(கீழ்ப்படுத்தி) மேம்பட்டு ஒலித்தன; வந்நிகர்வாழ்த்து- (அரசனைத்) துதிக்கும் பாடல் ஒலி; ஏறுகொண்டு எழு மல்லர்-ஏற்றின் தன்மை படைத்து (வீரத்தோடு) எழுகின்ற வீர மற்றவர்களின்; இடிப்பினை- வீர முழக்கத்தை; மாறுகொண்டன-பகைத்தனவாய்ப் பேரொலியாயின. மென்மையான வேதியர் வாழ்த்தும், வந்நிகர் வாழ்த்தும் வன்மையான முரசொலியையும், மல்லர் முழக்கத்தையும் கீழ்ப்படுத்தின என்பதால் அவற்றின் மிகுதி கூறியவாறு. ‘அரோ’ அசை. 17 |