கோசல நாட்டின் அழகிழந்த காட்சி 2120. | ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோள் தார் துறந்தன; தண் தலை நெல்லினும், நீர் துறந்தன; தாமரை நீத்தெனப் பார் துறந்தனள், பங்கயச் செல்வியே. |
வயல் - வயல்கள்; ஏர் துறந்த - கலப்பையைத் துறந்திருந்தன; இள மைந்தர் தோள் - இளைய ஆடவர்களின் தோள்; தார் துறந்தன - (இன்பச்சிறப்பிற்குக் காரணமான) பூமாலைகளை நீங்கியிருந்தன; நீர்-; தண் தலை -குளிர்ந்த இடமாகிய வயல்; நெல்லினும் - நெற்பயிரின்கண்ணும்; துறந்தன -இல்லாமல் இருந்தன; தாமரை நீத்தென - (நீர் இல்லாமையால்) தாமரை (அந்நாட்டில்)இல்லாமல் சென்றுவிட்டதாக; பங்கயச் செல்வி - தாமரையில் வீற்றிருக்கின்ற திருமகள்; பார் துறந்தனள் - (தான் வாழ்கின்ற மனையாகிய தாமரை இல்லாமையால்) கோசலநாட்டை விட்டு நீங்கினாள். வயலை உழுவார் இன்மையால் ஏர் துறந்தன. ஏர் - அழகு என்றும் கொள்ளலாம். சோகம்நாட்டைக் கவ்வுதலின் ஆடவர் தார் அணியவில்லை. நெற்பயிரும், தாமரையும் இன்றி வயல்கள்பொலிவழிந்தன. மன்னன் இறப்பவும், இராமன் காடு செல்லவும் நாடு பொலிவிழந்ததாம். “எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறநா. 187) என்றது ஒப்புநோக்கத்தக்கது. 19 |