2125.பாடல் நீத்தன, பண் தொடர் பாண் குழல்;
ஆடல் நீத்த, அரங்கொடு அகன் புனல்;
சூடல் நீத்தன, சூடிகை; சூளிகை
மாடம் நீத்தன, மங்கல வள்ளையே.

     பண் தொடர்- இசையொடு தொடர்ந்த; பாண் குழல்- இசைக்கின்ற
வேய்ங்குழல்கள்; பாடல் நீத்தன - இசை பாடுதலை ஒழிந்தன; அரங்கொடு
அகன் புனல்
- நாட்டிய அரங்குகளோடு அகன்ற நீர்நிலைகள்; ஆடல்
நீத்த
- ஆடுதலை ஓழிந்தன;  சூடிகை- தலை உச்சி;  சூடல் நீத்தன -
மலர் சூடுதலை ஒழிந்தன; சூளிகை மாடம் -நிலாமுற்றத்தை உடைய
மாளிகைகள்; மங்கல வள்ளை நீத்தன - மங்கலப் பாடல்கள் பாடப்
பெறுதலை ஒழிந்தன.

     ஆடல் - சிலேடையால் இருபொருள் தந்தது. நடனமாடல், நீராடல்
என்பன முறையேஅரங்கிற்கும் நீர்நிலைக்கும்  ஆயின. ‘புனல்’ என்பது
யாற்று நீரைக் குறிக்கும். சூடிகை -உச்சி, ‘சூடா’ என்னும் வடசொல் ‘சூடி’
என்றாகி ‘க’ ப்ரத்யயம் பெற்று ‘சூடிகை’ என்றாகியது.வள்ளைப்பாட்டு -
உரற்பாட்டு. தம்தலைவனைப் புகழ்ந்தும் மற்றவரைக் குறைத்தும் பாடுதலின்
ஏற்றிழிவுடைய உரற்பாட்டாகும். ‘கொற்ற வள்ளை’  என்று  புறத்திணையில்
வரும் துறையும்இக்கருத்தினதே.  குறைத்துப்படாது  புகழ்ந்து  பாடுதல்
மட்டும் வருதலின் ‘மங்கள வள்ளை’என்பர்.  இப்பெயரில் ஒரு சிறு
பிரபந்தம்  உண்டு. ‘ஏ’ ஈற்றசை.                                   24