2127.அலர்ந்த பைங் கூழ், அகன் குளக் கீழன,
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்,
உலர்ந்த - வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கம் பரிசிலர் போலவே.

     அகன் குளக் கீழன - அகன்ற குளத்தின் தலை மடைக்கீழ் உள்ளன
வாகிய; அலர்ந்த பைஞ்கூழ் - வளமான பசிய நெற்பயிர்; மலர்ந்த
வாயில்
- விரிந்துள்ளமதகு வழியாக; புனல் வழங்காமையால் - ஓடி
வந்து விழும் நீர் வராதபடியால்;  வன்கண் - (இரப்போர்க்குச் சிறிதும்
கொடாத) கொடுமையுடைய; உலோபர் -கருமிகள்; கடைத்தலை - வாயில்
முகப்பிலே; புலர்ந்து நிற்கும்  பரிசிலர் போல- (ஒன்றும் பெறாமையால்)
கருமிபோல - (ஒன்றும் பெறாமையால்) வாடி நிற்கும் இரவலர்களைப் போல;
உலர்ந்த - காய்ந்துபோயின.

     பெரும் பொருள் இருந்தும் கருமிகள் மனம் இன்மையால் பொருள்
தராமையால் இரவலர் அவர்வாயில்முன் வாடிக் கிடப்பர். அது குளத்தில்
நீர்
நிறையஇருந்தும் மதகு வழியே நீர் பாய்ச்சுவார் ‘இல்லாமையால்
தலைமடைப் பயிர்கள் காய்ந்துகிடத்தலுக்கு உவமையாயிற்று.  தலைக்கடை
என்பதனைக் கடைத்தலை எனல் இலக்கணப்போலி; அஃதாவது சொற்கள்
முன்பின்னாக மாறி நிற்றலாதலின். ‘ஏ’ ஈற்றசை.                      26