பரதன் அழகு அழிந்த நகரின் நிலையைப் பார்த்தல் 2130. | மீண்டும் ஏகி, அம் மெய் எனும் நல் அணி பூண்ட வேந்தன் திரு மகன், புந்திதான் தூண்டு தேரினம் முந்துறத் தூண்டுவான், நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான். |
மெய் எனும் நல் அணி பூண்ட அவ் வேந்தன் - வாய்மை என்னப் பெறுகின்ற சிறந்தஅணியை அணிந்துகொண்ட அந்தத் தயரதனுடைய; திருமகன் - சிறந்த மகனாகிய பரதன்; மீண்டும் ஏகி - மேலும் சென்று; புந்திதான் - அறிவானது; தூண்டு தேரினும் -விரைவாகச் செலுத்தப்படுகின்ற தேரைக் காட்டிலும்; முந்துற - முற்படடுச் செல்லும்படி; தூண்டுவான் -அறிவை முற்படச் செலுத்தி ஆராய்பவனாகி; நீண்ட வாயில் -நெடிதுயர்ந்த வாயிலை உடைய; நெடுநகர் - சிறந்த அயோத்தி நகரை; நோக்கினான் -உள்உணர்வோடு பார்த்தான். நாடு பொலிவிழந்த நிலை கண்ட உண்டாகிய துன்பம் அவன் புத்தியை விரைவாகச்செலுத்தியது. ஆதலின் விரைந்து நகர்வாயிலை அடைந்தான். அயோத்தியின் ‘வைஜெயந்தம்’ என்ற பெயருடைய மேற்கு வாயிலைப் பரதன் அடைந்தான் என்றுவான்மிகம் கூறும். 29 |