கொடைமுரச  ஒலி அவிந்த நகர் காணல்  

2132.‘ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும்,
வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து’ எனக்,
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன,
கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே.

    ‘ஈட்டிய யாவையும் - தேடித் தொகுத்த எல்லாச் செல்வங்களையும்;
நல்புகழ் ஈட்டுக்கு - நல்ல புகழைப்பெறுதற்கு;  வேட்ட - தாம்
விரும்பியவற்றை; வேட்டவர் - விரும்பியவர்கள்; விரைந்து கொண்மின்’ -
விரைவாக வந்து வாங்கிக்கொள்ளுங்கள்; என - என்று; கோட்டி மாக்களை-
கூட்டமாக உள்ள மக்களை; கூவுவபோல்வன - கூவி அழைப்பன
போல்வனவாகிய; முரசின் கிளர் ஓதை - கொடை  முரசின் செருக்கிய
ஒலியை; கேட்டிலன்- (பரதன்) கேட்கப் பெற்றிலன்.

     கொடை  முரசு ஒலித்தலை இரவலர்களைக் கூவி அழைத்தல் போலும்
என்றது  தன்மைத்தற்குறிப்பேற்ற அணி.  கோட்டி - அவை,  மக்கள்
கூட்டம்  உள்ள இடம்.  இங்கே மக்கள் திரள்என்பதாயிற்று. “என்னும்
குறளில் ‘கோட்டி’ என்பது  அவை என்னும் பொருள்படல் அறிக. (குறள்
401).                                                         31