இசையில்லாத அயோத்தி நகரம் 2135. | சூழ் அமைந்த சுரும்பும், நரம்பும், தம் ஏழ் அமைந்த இசை இசையாமையால், மாழை உண் கண் மயில் எனும் சாயலார் கூழை போன்ற, பொருநர் குழாங்களே. |
பொருநர் குழாங்கள் -பாடி ஆடுகின்ற பொருநர் கூட்டங்களில் உள்ள; சூழ் அமைந்த கரும்பும் - (மணம்உள்ளவிடத்தே)சுற்றுதல் பொருந்திய வண்டுகளும்; நரம்பும் - நரம்பினால்இசைக்கும்யாழ் முதலிய கருவிகளும்; ஏழ் அமைந்த - ஏழாகப் பொருந்திய;தம் இசை இசையாமையால் - தமக்குரிய இசையை ஒலிக்காமல் வெறுமனே கிடக்கிறபடியால்; மாழைஉண்கண் மயில் எனும் சாயலார்- இளமைத் தன்மையாகியஅறியாமையுடைய மையுண்ட பார்வையுடையவரும் மயிலைப் போலும் சாயலுடையவரும் ஆயமகளிர்; கூழை -தலைக் கூந்தலை; போன்ற - போன்றன. கூந்தல் கருநிறம் உடையது. நரம்பு போலும் தோற்றம் உடையது. இசை இசைக்காது - இசைஇசையாத கருநிறம் உடைய வண்டுகளும், நரம்புடைய யாழும் அது போன்றன என்றார். ஏழ் அமைந்தஇசை, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் எழுவகைச் சுரத்தானங்கள், ச ரி க ம ப த நி எனலும் ஆம். மாழை - இளமை என்னும் பொருட்டு. அது இளமைத்தன்மையாகிய அறியாமையைக் குறித்தது. “மாழை மான் மட நோக்கி உன் தோழி” (திவ்வியப்.1418) என்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. ‘ஏ’ ஈற்றசை. 34 |