பரதன் தயரதன் வாழுமிடத்தை அடைதல்  

2140.அனைய வேலையில், அக் கடைத் தோரண
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள்
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும், தந்தை சார்விடம் மேவினான்.

     அனைய வேலையில் - இவ்வாறு  உரையாட்டு நிகழும் பொழுதில்;
அக்கடைத் தோரணமனையின் - அந்த வாயிலிற் கட்டிய தோரணக்
கொடிகளையுடைய மாளிகைகளால்; நீள் நெடுமங்கல வீதிகள் -
நெடிதுயர்ந்த மங்கலம் பொருந்திய தெருக்களை;  நினையும்மாத்திரத்து -
நினைக்கும் பொழுதிற்குள் (கணப் பொழுதில்);  ஏகிய - கடந்து  சென்ற;
நேமியான் தனையனும் - சக்கரவர்த்தி தயரதன் குமாரனாகிய பரதனும்;
தந்தை - தன்தந்தையாகிய தயரதன்;  சார்வு இடம் - வழக்கமாகத்
தங்கியுள்ள அரண்மனையை;  மேவினான் - சென்று அடைந்தான்.

     நேமி - சக்கரம்.  நேமியான் - ஆணைச் சக்கரம்  உடைய அரசன்;
இங்குத் தயரதன்.பரதன் தான் கண்ட காட்சிகளால் முன்பே  “மன்னன்
வைகும் வளநகர் போலும் ஈது?” என்று (2137)ஐயப்பட்டான் ஆதலின்,
அரசனை முதலிற் பார்க்க விரும்பினான். நெடுந் தெருக்கள் பல கடந்து
அரச மாளிகையை அடைந்தான் என்க.                            39