தாயுரை கேட்ட பரதன் மூர்ச்சித்தல்  

2146.எறிந்தன கடிய சொல் செவியுற் எய்தலும்,
நெறிந்து அலர் குஞ்சியான், நெடிது வீழ்ந்தனன்;
அறிந்திலன்; உயிர்த்திலன் ;- அசனி ஏற்றினால்
 மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே.

     எறிந்தன- வேல் எறிந்தாற் போன்ற; கடிய சொல் -(கைகேயியின்)
கொடுஞ்சொல்; செவியுள் எய்தலும் - காதிற்குள்நுழைந்தவுடன்; நெறிந்து
அலர் குஞ்சியான்
- படிப்படியாக நெறிப்புடைத்தாய் விரிந்த தலைமயிரை
உடைய பரதன்; அசனிஏற்றினால் - பேரிடியால்; உயர்
மராமரம்-ஓங்கி
வளர்ந்த மராமரமானது;  மறிந்து மண் உற்றென்ன- ஒடிந்து மண்ணிலே
விழுந்ததுபோல; நெடிது வீழ்ந்தனன் - நீண்டுவிழுந்த; அறிந்திலன் -
அறிவு கெட்டு; உயிர்த்திலன் - மூச்சற்றவனாய்க்கிடந்தான்.

     இடியேறுண்ட மராமரம் கைகேயி சொற்கேட்டு வீழ்ந்த பரதனுக்கு
உவமை ஆயிற்று, அசனி -இடி-இடிஏறு என்பது ஆண்மை  மிக்க இடி
எனப்பெறும்;  அஃதாவது  பேரிடி. ‘ஏ’ ஈற்றசை.                    45