2151. ‘முதலவன் முதலிய முந்தையோர் பழங்
கதையையும் புதுக்கிய தலைவன்! கண்ணுடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை, எங்ஙனம் பிரிந்து போயினாய்?

    ‘முதலவன் முதலிய - சூரிய குலத்து  முன்னோனாகிய ஆதித்தன்,
மனு,  மாந்தாதா,  சிபி,  முசுகுந்தன்முதலிய; முந்தையோர் - முற்பட்ட
அரசர்களது; பழங்கதையையும் - நெடுநாட்பட்டவீர வரலாறுகளையும்;
புதுக்கிய - உன் வீரச் செயல்களால் உண்மை என்று உலகறியச்செய்த;
தலைவன்! - தலைவனாகிய தயரதனே!; நுதல்கண் உடையவன் -
நெற்றியிற்கண் உடையவனாகிய சிவபிரானது; சிலைவிலின் -
மேருமலையாகிய வில்லின்; நோன்மை -வலிமையை; நூறிய -
பொடியாகும்படி செய்த; புதல்வனை - பெருவீரனாகிய  இராமனை;
எங்ஙனம் பிரிந்து  போயினாய் - எவ்வாறு பிரிந்து  சென்றாய்?

     முன்னோர் கதைகளைத் தம் காலத்தவர் நம்ப வேண்டுதற்குத் தாமும்
வீரச்செயல்களைச்செய்து மெய்ப்பித்தல் வேண்டும். அதனால்,  இவ்வீர
வரலாறுகள் இக்குலத்தினர்க்கு இயல்பு,இயலாததன்று என்று உலகம்
உணருமாதலின் ‘புதுக்கிய’ என்றார். சிலை - -மலை; இங்கு மேருமலை;
‘இமயம்’ எனலும் ஒன்றே. “இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்”
(கலித்.38) என்றதும்காண்க. இனி, வில் செய்தற்குரிய சிலை என்னும்
மரத்தினாற் செய்யப்பட்ட வில் எனப் பொருள்உரைத்தல் சிவன் வில்லுக்கு
ஏற்புடைத்தாகாமை அறிக. ‘தலைவன்’ நெஞ்சிற்கு நெருக்கமாதரிலன்
அண்மைவிளி, இயல்பாய் நின்றது.  இராமனிடத்திற் பெருங்காதல் உடைய
தயரதன், மேலும் அவன்வீரச் செயல்கள் கண்டு அவனிடத்திற் கவரப்
பெற்றவன். அவனை எங்ஙனம் பிரிந்து செல்லவன்மை பெற்றான் என்ற
பரதன் புலம்பல் ‘இராமனைப் பிரிந்ததனால் தயரதன் இறந்தான்’ என்னும்
கருத்துக்கும் அடி அமைத்து  நிற்றல் காண்க.                       50