2152. | ‘செவ் வழி உருட்டிய திகிரி மன்னவ!- எவ் வழி மருங்கினும் இரவலாளர்தாம், இவ் வழி உலகின் இல்; இன்மை நண்பினோர் அவ் வழி உலகினும் உளர்கொலோ? - ஐயா! |
‘ஐயா! - ஐயனே!; செவ்வழி திகிரி உருட்டிய மன்னவ! - (நீதி தவறாத)நேரிய வழியில் ஆணைச் சக்கரத்தைச் செலுத்திய மன்னவனே; இவ்வழி உலகின் எவ்வழிமருங்கினும் - இவ்விடத்துள்ள உலகத்தின் எந்த இடப்பகுதியிலும்; இரவலாளர் தாம்- இல்லை என்று சொல்லி இரப்பவர்கள்; இல் - இல்லை; (நின் கொடைக்கு இரவலரைத்தேடிச் சென்றாயோ) இன்மை நண்பினோர் - வறுமையைத் தமக்கு நட்பாக்கிக் கொண்டவர்கள்; அவ்வழி உலகினும் - அவ்விடத்ததாகிய விண்ணுலகின்கண்ணும்; உளர்கொலோ? - இருக்கின்றார்களோ? (அவர்கள் வறுமையை நீக்கச் சென்றாயோ) “மொய் ஆர் கலிசூழ் முதுபாரில், முகந்து தானக், கை ஆர் புனலால் நனையாதன கையும்இல்லை”, “ஈந்தே கடந்தான் இரப்போர் கடல்”, “கொள்வார் இலாமை” என (165, 170, 172) முன்கூறியவற்றால் தயரதனுக்கு அயோத்தியிலும், கோசலத்திலும், மண்ணுலகிலும் இரவலர் இன்மை பெறப்படும். கொடையிற் சிறந்த மன்னன் விண்ணுலகில் இரவலரைத் தேடிப் புறப்பட்டதாக அவன்இறப்பினைத் தற்குறிப்பேற்றம் செய்தான். இனி, ‘இவ்வழி உலகினில்’ என்பதனை, ‘உலகின்இல்’ எனப் பிரியாது ஒரு சொல்லாகக் கொண்டு, ‘இவ்வுலகத்தின்கண் எவ்விடத்தும்இரவலாளர்தாம் உள்ளனர். உன்னோடு ஒத்த வகையில் பழகுதற்குரிய நண்பினோர் இன்மையால்,அவ்வழி உலகாகிய விண்ணுலகத்தில் உனக்கொத்த நண்பர்களைத் தேடிச் சென்றாயோ! எனப் பரதன்புலம்பியதாகக் கூறுதல் முன்னைய கம்பர் கூற்றுக்கு முரண்படுதலின் சிறப்பின்மைஅறிக. 51 |