2154. | ‘இம்பர் நின்று ஏகினை; இருக்கும் சார்பு இழந்து, உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ? சம்பரன் அனைய அத் தானைத் தானவர், அம்பரத்து இன்னமும் உளர்கொலாம்? - ஐயா! |
ஐயா! - ஐயனே!; சம்பரன் அனைய - சம்பராசுரனைப் போன்ற அத்தகைய; தானைத் தானவர் - வேனையை உடைய அசுரர்கள்; அம்பரத்து - விண்ணுலகத்து; இன்னமும் உளர் கொலாம் - இப்போதும் இருக்கின்றார்கள் போலும்; (அதனால்) உம்பர் -தேவர்கள்; இருக்கும் சார்பு இழத்து - (அசுரர்கள் தொல்லையால்) தாம் இருக்கும்விண்ணுலக இடத்தை அவர்கள்பால் இழந்து; வந்து - மண்ணுலகத்தில் அயோத்திக்கு வந்து; உன்கழல்- உன்னுடைய கழல் அணிந்த திருவடிக் கீழ்; ஒதுங்கினார்கொல் - சரணடைந்து தங்கினார்களோ?; (அதனால்தான்) இம்பர் நின்று - இவ்வுலகத்திருந்து; ஏகினை- விண்ணுலகம் சென்றனையோ? தேவர்களுக்குப் பகைவர் அசுரர்; அசுரர்கள் வலியுடையராயின் அவர்களை அழிக்கவலியுடையாரைச் சரணடைதல் தேவர் வழக்கம். முன்னம் சம்பராசுரனை ஒழித்துத் தேவருலகைஇந்திரனுக்கு மீட்டுக் கொடுத்தான் தயரதன். இப்போதும் விண்ணுலகம் சென்றது அப்படித் தேவர்களுக்கு உதவி செய்தற்காகப் போலும் என்று சொல்லிப் புலம்பினான் பரதன். 53 |