2156. | ‘ஏழ் உயர் மத களிற்று இறைவ! ஏகினை - வாழிய கரியவன், வறியன் கை என, பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா ஆழியை, இனி, அவற்கு அளிக்க எண்ணியோ? |
ஏழ் உயர்- ஏழ் உறுப்புகள் உயர்ந்து விளங்கும்; மத களிற்று - மதங்கொண்ட யானையை உடைய; இறைவ! - தலைவனே!; பாழி அம் புயத்து நின் - வலிய அழகிய தோள்களை உடையஉனது; பணியின் - கட்டளையின்; நீங்கலா - (சிறிதும்) வழுவாத; ஆழியை - ஆணைச் சக்கரத்தை; கரியவன் கை வறியன் என - இராமபிரான் வெறுங்கையனாய் இருக்கின்றான் என்பது கருதி; இனி அவற்கு அளிக்க எண்ணியோ - இனிமேல் அவனுக்கு (அச்சக்கரத்தைக்)கொடுக்கக் கருதியோ ஏகினை - விண்ணுலகு சென்றாய்? தான் இருக்கும்வரை இராமன் அரசனாதல் இயலாது. ஆதலின், தனது ஆழியை அவனக்கு அளிக்கஎண்ணித் தயரதன் விண்ணுலகு சென்றான் என்று தற்குறிப்பேற்றம் செய்தான் பரதன். கரியவன் -கரியவனாகிய திருமால் எனப் பொருள் உரைத்து அவன் கையில் ஒன்றுமில்லாமல் வறியனாயிருத்தல்கருதிக் தன் சக்கரத்தை அவன்பால் கொடுத்து விண்ணுலகு சென்றான் தயரதன் எனினும் அமையும். கால்கள் நான்கும், மருப்பு இரண்டும், துதிக்கையும் ஆக ஏழ் உறுப்புகள் உயர்ந்து இருத்தல் உத்தம அரசுவாவின் இலக்கணம். “தாழிருந்தடக்கையும் மருப்பும் தம்பியர், தோழர் தன்தாள்களாச் சொரியும் மும்மதம், ஆழ்கடற் சுற்றமா அழன்று சீவக, ஏழுயர் போதகம் இனத்தொடேற்றதே” (சீவக. 775) என்பது காண்க. இனி ஏழு முழம் உயர்ந்திருப்பது அரசுவாவின் இலக்கணம்என்பதும் ஒன்று, “ஏழுயர் போதகம்” (சீவக. 775) “ஏழுயர் களிற்று மன்னர்” (பாகவதம்3353) என்பனவற்றைக் காண்க. 55 |