இராமனை வணங்கினாலன்றித் துயர் போகாது எனல் 2159. | ‘எந்தையும், யாயும், எம் பிரானும், எம் முனும், அந்தம் இல் பெருங் குணத்து இராமன்; ஆதலால், வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால், சிந்தை வெங் கொடுந் துயர் தீர்கலாது’ என்றான். |
எந்தையும் - என் தந்தையும்; யாயும் - என் தாயும்; எம்பிரானும்- என் கடவுளும்; எம்முனும் - என் அண்ணனும்; அந்தம் இல் பெருங்குணத்து இராமன் - எல்லையில்லாத பெருங்குணங்களை யுடைய இராமபிரானே யாவன்; ஆதலால்-; அவன் கழல் - அவனுடைய திருவடிகளை; வந்தனை வைத்த போது அலால் - வணங்குதல் செய்தபோது அல்லாமல்; சிந்தை - என் மனத்து; வெங்கொடுத்துயர் - (தந்தையின் இறப்பினால் உண்டாகிய) மிகக் கொடிய துன்பம்; தீர்கலாது - நீங்காது; என்றான்-. மகன், அடியான், தம்பி என்னும் மூன்று நிலைகளில் தன்னை இராமனுக்கு ஆட்படுத்திக்கொண்டஅன்பு சான்ற பரதனை இங்கே காண்கிறோம். ‘அந்தம் இல் பெருங்குணம்’ (2143) ஒப்பு நோக்குக. “தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால், மனக்கவலை மாற்றல் அரிது” என்னும்குறளை (குறள் 7) இச்செய்யுளின் பின்னிரண்டு அடிகளொடும் ஒப்புநோக்குக. 58 |