பரதன் கொண்ட சீற்றம்  

2167.சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!

     சூடின மலர்க்கரம் - தாய்முன் தலைமேற் குவித்திருந்த பரதன்
கரமலர்கள்; சொல்லின்முன் - கைகேயி கூறிய வார்த்தை செவியை
அடைதற்கு முன்னால்;  செவி கூடின- காதுகளைப் பொத்திக் கொண்டன;
புருவங்கள் குறித்து  நின்று  கூத்து  ஆடின -(பரதன்) புருவங்கள்
வளைந்து  நின்று மேலே ஏறியும் கீழே இறங்கியும் நடனமிடுவனவாயின;
உயிர்ப்பினோடு - அவன் மூச்சுக் காற்றுடனே; அழல் கொழுந்துகள் -
நெருப்புச்சுவாலைகள்; ஓடின - வெளிவந்தன; கண்கள் உதிரம்
உமிழ்ந்தன
- கண்கள் இரத்ததைக்கக்கின.

     கைகேயியின் கடுஞ்சொல் கேட்கப் பிடிக்காமல் பரதன் செவிகளைப்
பொத்தினன். புருவம்வளைதல் மேலும் கீழுமாதல், மூச்சுக்காற்று வெப்பமாய்
வெளிப்படுதல், கண் கோவைப்பழம் போல்சிவத்தல் (உதிரம் கான்றல்)
இவை சினத்தின் மெய்ப்பாடுகளாம். ‘ஏ’ ஈற்றசை.                     65