2170.அஞ்சினர் வானவர்; அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனைப் பலர்; சொரி மதத் தொளை
எஞ்சின, திசைக் கரி; இரவி மீண்டனன்;
வெஞ் சினக் கூற்றும், தன் விழி புதைத்ததே!

     (பரதன் பெருங் கோபம் கண்டு) வானவர் அஞ்சினர் - தேவர்கள்
பயந்தார்கள்; எனைப்பலர் அவுணர் அச்சத்தால் துஞ்சினர் -
எத்துணையோ பலராய அசுரர்கள் பயத்தால்இறந்தனர்;  திசைக் கரி -
திக்கு யானைகள்;  மதம் சொரிதொளை - மதம்சொரிகின்ற மிகப் பல
தொளைகள்;  எஞ்சின - தூர்ந்துபோகப் பெற்றன; இரவி -சூரியன்;
மீண்டனன் - மறைந்து போனான்; வெஞ்சினக் கூற்றும் - இயல்பிலேயே
கொடுஞ்சினம் உடைய யமனும்; தன் விழி புதைத்தது - தன்னுடைய
கண்களை (பரதனைக் காணஅஞ்சி) மூடிக் கொண்டான்.

     அமுதுண்ட வானவர் அஞ்சினர்; அமுதுண்ணாத அவுணர் பயத்தால்
துஞ்சினர்; அமரர் - மரிக்கும்தன்மை அற்றவர். பரதன் சீற்றத்தை உயர்வு
நவிற்சியாக வருணித்தார். ‘ஏ’ஈற்றசை.                            69