பரதன் இராமனுக்கு அஞ்சித் தாயைக் கொல்லாது விடுதல்  

2171. கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
‘நெடியவன் முனியும்’ என்று அஞ்சி நின்றனன்;
இடிஉரும் அனைய வெம் மொழி இயம்புவான்;

    கொடிய வெங் கோபத்தால்- (பொங்கிப் புறப்பட்ட) மிகக் கொடிய
வெகுளியால்; கொதித்த - (மனம்) சூடேறிய;கோளரி - சிங்கமாகிய பரதன்;
கடியவள் - கடும்செயல் செய்தவளாகியகைகேயியை; ‘தாய்’ எனக்
கருதுகின்றிலன்
- (தன்னுடைய) தாய் என்றுநினைக்கவில்லை (ஆயினும்
இவளைக் கொன்றால்); நெடியவன் முனியும் - மூத்தோனாகியஇராமன்
கோபிப்பான்; என்று அஞ்சி நின்றனன் - என்று கருதிப் பயந்து
கொல்லாமல்(தடைப்பட்டு) நின்றான்;  இடி உரும் அனைய - பேரிடியை
ஒத்த; வெம் மொழி - கொடியசொற்களை; இயம்புவான் - சொல்லத்
தொடங்கினான்.

     தன் மகனுக்குப் பழிவரும் செயலைச் செய்தவள் ஆதலின் தாய்
அல்லள்; கொடுஞ்செயல்செய்தாள் ஆதலின் கொல்ல வேண்டும். ஆனால்,
கொன்றாலும் அது இராமனுக்கு உவப்பாகாது என்பதுகருதிக் கொல்லாமல்
விட்டான் என்றார். பரதன் தாயாகிய கைகேயியைக் கொல்லநினைத்ததற்கும்.
கொல்லாமல் விட்டதற்கும் இராமன்மாட்டுக் கொண்ட பக்தியே காரணமாதல்
அறிக. இடி உரும்-ஒரு பொருட் பன்மொழி. 2298,2325-ஒப்பிட்டுணர்க.  70