பரதன் இனிச் செய்யவுள்ள தன் செயல் கூறுதல் 2187. | ‘ஏன்று, உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித் தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர, சான்றும்தானே நல் அறம் ஆக, தகை ஞாலம் மூன்றும் காண, மா தவம் யானே முயல்கின்றேன். |
‘பாவி உன் கும்பி வயிற்றினிடை- பாவியாகிய உன்னுடைய வயிற்றிடத்தில்; ஏன்று வைகித் தோன்றும் - உடன்பட்டுத்தங்கிப் பிறந்ததனால் உண்டாகிய; தீராப் பாதகம் - நீங்காத அரிய பாவம்; அற்று- அடியோடு இல்லையாகி; என் துயர் தீர - (தந்தை இறந்தது; இராமன் காடு சென்றது ஆகிய நிகழ்ச்சிகளால் ஆய) என் துயரமெல்லாம் தீரும்படி; நல் அறம் தானேசான்றும் ஆக - நன்றாகிய அறக்கடவுளே சாட்சி ஆகப் பொருந்த; தகை ஞாலம் மூன்றும் - மேம்பாடுடைய மேல், கீழ், நடு என்னும் மூவுலகமும்; காண - (என் நிலை) காணும்படி; யானே மாதவம் முயல்கின்றேன் - நானே பெருந்தவம் செய்ய இருக்கின்றேன்.’ பரதனுக்கு அரசுரிமை கைகேயி வயிற்றில் இருந்து பிறந்ததனால் உண்டாயது; ஆகவே. அதனைப்பாதகம் என்றான். ‘சான்றும்’ ‘உம்’ இசைநிறை. ‘பழிதீர்தற்குரிய என் செய்வினை’ என்றுமேற்பாட்டிற் கூறினான். அது இன்னது என்பது ‘மாதவம்’ என இப்பாட்டிற் கூறினாள் ஆயிற்று. கும்பி வயிறு - இரு பெயரொட்டு; கும்பி - சேறு என்றும் பொருள்படும். அப்பொருள் கொண்டால்சேறு போன்ற பாவம் நிறைந்த வயிறு என்றாகும். 86 |