பரதனின் இரங்கல் உரை  

2191.‘எந்தை எவ் உலகு உளான்? எம் முன் யாண்டையான்?
வந்தது, தமியென், இம் மயக்கம் காணவோ?
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும்,
அந்தரத்து அமரரும் அழுது சோரவே.

     அந்தரத்து அமரரும் - வானுலகில் உள்ள தேவர்களும்; அமுது
சோரவே
-(இவன் புலம்பைக் கேட்டும் இவனைக் கண்டும் தம்மாலும்
ஆற்றமுடியாமல் தாமும்) அழுது சோரும்படி;‘எந்தை எவ் உலகு
உளான்?
- என் தந்தையாகிய தயரதன் இப்போது  எந்தஉலகத்தில்
இருக்கிறான்?;  எம்முன் யாண்டையான் - என் தமையனாகிய இராமன்
எவ்விடத்தில் இருக்கிறான்?; தமியென் - ஆதரவற்ற தனியனாகிய யான்;
வந்தது -அயோத்திக்கு வந்தது;  இம் மறுக்கம் காணவோ? - இந்தத்
துன்ப நிலையைக்காண்பதற்காகவோ?; சிந்தையின் - (என்) மனத்தில்;
உறு துயர் - பொருந்தியதுன்பத்தைத்; தீர்த்திர்- போக்குங்கள்;’ எனும்-
என்பான்.

     இறந்தபின் வேறு உலகம் செல்வர் ஆதலான் ‘எந்தை எவ் உலகு
உளான்’ என்றான். இராமன்காடு சென்றபடியால் ‘யாண்டையான்’ அதாவது
காட்டில் எவ்விடத்தில் உள்ளான் என்றான்.தந்தையோடும் தமையனோடும்
இருக்கின்ற பேறு பெறாமையால் தன்னைத் ‘தமியென்’ என்றுகுறிப்பிட்டான்.
‘ஆல்’, ‘ஏ’ அசைகள்.                                          90