2193. | ‘கொடியவர் யாவரும் குலங்கள் வேர்அற நொடிகுவென் யான்; அது நுவல்வது எங்ஙனம்? கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன், முடிகுவென், அருந் துயர் முடிய’ என்னுமால், |
‘யான்-; கொடியவர் யாவரும் - (இராமனைக் காடு செல்லச் செய்த) கொடியவர்கள்எல்லோரும்; குலங்கள் வேர் அற - தம் குலங்களோடு வேர் அற்றுப் போகும்படி; நொடிகுவென் - அழித்து விடுவேன்; அது நுவல்வது எங்ஙனம்? - அதுபற்றிச் சொல்வது என்னபயன் உடையது; (செயலின்தான் அறிய வேண்டும்); கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் - (எல்லோரையும் அழித்துவிட்டு இறுதியில்) கொடிய கைகேயி வயிற்றில் பிறந்தவஞ்சகனாகிய யானும்; அருந்துயர் முடிய முடிகுவென்’- என்னுடைய பொறுத்தற்கரிய துன்பம்இல்லையாம்படி இறந்துபடுவேன்;’ என்னும் - என்று சொல்வான். மிகுதியான துன்பத்தால் பேசுகிறான் ஆதலின், ‘கொடியவர்களையும் அழித்து, நானும்இறந்துபடிவேன்’ என்றான். ‘ஆல்’ ஈற்றசை. 92 |