கோசலை, பரதன் தூயன் என அறிந்து உரை தொடங்குதல்  

2196. புலம்புறு குரிசில்தன் புலர்வு நோக்கினாள்,
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை;
‘நிலம் பொறை ஆற்றலன், நெஞ்சம் தூய்து’ எனா,
சலம் பிறிது உற, மனம் தளர்ந்து, கூறுவாள்;

     குலம், பொறை, கற்புஇவை சுமந்த கோசலை - உயர்ந்த குடிப்
பிறப்பும்,பொறுமையும், கற்பும் ஆய இவற்றை நல் அணிகலன்களாகச்
சுமந்துகொண்டுள்ள கோசலை; புலம்புஉறுகுரிசில்தன் -துயரதம்
அடைகின்ற பரதனது; புலர்வு - துயர்ச்சோர்வினை;நோக்கினாள் -
மனத்தால் ஆராய்ந்தாள்; ‘நிலம் பொறை- (இந்தக்), கோசலஅரசைச்
சுமக்கின்ற ஆட்சி உரிமையை;  ஆற்றலன் -விரும்பியவன் அல்லன்;
நெஞ்சம் தூய்து - இவன் மனம் தூய்மையானது;எனா - என்று  கருதி;
சலம் -(இதுகாறும் அவனைப்பற்றித் தான்கொண்டிருந்த)தவறான கருத்து;
பிறிது உற - (இப்போது)வேறுபட்டுப் போக;மனம் தளர்ந்து -
(இப்படிப்பட்ட நல்லவனை மாறாகக் கருதினோமே
என்பதனால்)மனம்
சோர்ந்து; கூறுவாள்- சொல்பவள் ஆனாள்.

     கைகேயி போலப் பரதனும் அதற்கு உடன்பட்டவன் என்றுமுன்னர்க்
கருதியவள் ஆதலின், அக்கருத்தைச் ‘சலம்’ என்று குறித்தார். ‘சலம்’ தீது,
வஞ்சனை, பொய் என்று பொருள்படும். புலர்வு - வாடிக்காய்தல்.
கோசலைக்குப் பரதன் நிலை கண்டுமனத்தளர்வு ஏற்பட்டது எனலாம்.   95