2216.‘பிணிக்கு உறு முடை உடல் பேணி, பேணலார்த்
துணிக் குறு வயிர வாள் தடக் கை தூக்கிப் போய்,
மணிக் குறு நகை இள மங்கைமார்கள் முன்,
தணிக்குறு பகைஞரைத் தாழ்க, என் தலை.

     ‘பேணலார்த் துணி - பகைவர்களைத் துண்டு படுத்துகின்ற;
குறுவயிரவாள்- சிறிய வலிமையான வாளை; தடக்கை தூக்கிப்போய்- நீண்ட
கைகளில் (வீரபராக்கிரமத்தோடு) தூக்கிச்சென்ற; (பின்மாட்டாமையால்)
பிணிக்கு உறு முடை உடல் பேணி - நோய்களுக்கு இடமாக(நின்று
சாவதாக) உள்ள நாற்றம் பிடித்த உடலைப் பாதுகாத்து (உயிர் வாழ
விரும்பி); மணிகுறு இள நகை மங்கைமார்கள் முன் - முத்துமணி
போன்ற இளைய புன் சிரிப்பினையுடைய மகளிர்முன்னால்; தணிக்குறு
பகைஞரை
- நம்மால் தாழச் செய்யப்பட வேண்டிய பகைவர்களை; என்
தலை தாழ்க
- என்தலை வணங்குவதாகுக.

     போரில் இறவாமல்பாதுகாத்தாலும் இந்த உடல் நிலையற்றது;
நோயால் இறந்து படக்கூடியதே, அதனைப் பாதுகாத்து மானம் கெட்டு
உயிர்வாழ்வதை விட, உயிரைப்போரில்விட்டு வீரனாக இறப்பதே மேல்
என்றான். தாழ்க்க.
வேண்டியபகைவர் முன் தாழ்தலே
கேவலம்; அதுவும் மகளிர் முன் ஆடவன் இவ்வாறு மானக்குறைஅடைதல்
மிகக் கேவலமாகும் என்பதாம்.                                115