2217. ‘கரும்பு அலர் செந் நெல் அம் கழனிக் கான நாடு
அரும் பகை கவர்ந்து உண, ஆவி பேணினென்,
இரும்பு அலர் நெடுந் தளை ஈர்த்த காலொடும்,
விரும்பலர் முகத்து, எதிர் விழித்து நிற்க, யான்.’

     ‘யான் -; அலர் கரும்பு செந்நெல் அம்கழனிக் கான நாடு -
விரிந்த கரும்பையும்செந்நெல்லையும் உடைய அழகிய வயல்களாற் சூழ்ந்த
காடுகளை உடைய என் நாட்டினை; அரும்பகைகவர்ந்து உண -
(வெல்லுதற்கு) அரிய பகைவன் கைப்பற்றிக்கொண்டு அநுபவிக்க; ஆவி
பேணினென்
- உயிரைக் காப்பாற்றிக் கொண்டவனாய்; இரும்பு அலர்
நெடுந்தளை -இரும்பாற் செய்யப்பெற்ற நீண்ட விலங்கு; ஈர்த்த
காலொடும்
- இழுக்கும்கால்களோடும்; விரும்பலர் முகத்து எதிர் -
என்னை விரும்பாத பகைவர் முன்னால்; விழித்து நிற்க - விழித்து
நிற்பேனாக.’

     விலங்கைப் பூட்டிக் கொண்டேனும் உயிரைக் காத்துக் கொள்ள
ஆசைப்படுதல் அரசகுலுத்தோர்க்கு மிகவும் இழுக்கு. ஆதலின் இங்ஙனம்
கூறினான்.  இதுவரை உள்ள பாடல்கள் பரதன்சொன்ன சூளுரைகளாகும்.
“தீயன கொடியவள் செய்த செய்கையை,  நாயினேன் உணர்ந்து” அதற்கு
உடன்பட்டு வரம்பெறுதலும், இராமன் காடேறச் செய்ததும்
நடந்திருக்குமாயின் இத்தகைய தன்மைகளையான் அடைவேனாக என்று
பரதன் சபதம் செய்தான் என்க - பரதன் சூளுரையை ஒரு காரணமாக்கி
நல்லறங்கள் பலவற்றை ஒரு சேரக் கூறினார் கம்பர். என்று  கொள்க.
அரசாட்சியும், போரும்பற்றிய பந்துச் செய்திகளைப் பரதன் கூறினான்;
அவன் அரசகுமாரண் ஆகலின் அத்தகையசெய்திகள் அவன் சூளுரையில்
மிகுதியும் பயிலுதல் இயல்பு.                                   116