கோசலை பரதனைத் தழுவி அழுதல் 2218. | தூய வாசகம் சொன்ன தோன்றலை, தீய கானகம் திருவின் நீங்கி முன் போயினான் வரக் கண்ட பொம்மலாள் ஆய காதலால், அழுது புல்லினாள். |
(கோசலை), தூய வாசகம் - (தன் மனத்) தூய்மையை அறிவிக்கும் சூளுரைகளை; சொன்ன தோன்றலை - சொல்லிய பரதனை; திருவின் நீங்கி - அரசுச் செல்வத்தைவிட்டுவிலகி; தீய கானகம் - கொடிய காட்டின் கண்; முன் போயினான் - முன்புசென்றவனாகிய இராமன்; வரக்கண்ட - திரும்பிவரப் பார்த்தாற்போன்ற; பொம்மலாள் -மகிழ்ச்சியை உடையவளாய்; ஆய காதலால் - அந்த இராமனிடத்து வைத்த அத்தகையஅன்போடு; புல்லி அழுதாள் - தழுவிக் கொண்டு அழுதாள். குணங்களால் இராமனுக்கும் பரதனுக்கும் வேற்றுமை இல்லை என்பதை உணர்ந்தனள். ஆதலால்,போனவன் வந்ததைப் பார்த்தாற் போன்ற மகிழ்ச்சியடைந்தாழ் எனவும், அவனிடத்து வைத்தஅத்தகைய அன்போடு புல்லினாள் எனவும் கூறினார். அழுதலும் புல்லுதலும் ஒரே சமயத்தில் நிகழ்தலின் ‘அழுது புல்லினாள்’ என்றாராயினும் ‘புல்லுதல்’ முதற்கண் வெளிப்பாடாதலின்‘புல்லி அழுதாள்’ என மாற்றி உரைக்கப்பட்டது. 117 |