சத்துருக்கனன் கோசலையை வீழ்ந்து வணங்கலும் வசிட்டன் வருதலும்  

2221.உன்ன நைந்து நைந்து, உருகும் அன்புகூர்
அன்னை தாளில் வீழ்ந்து, இளைய அண்ணலும்,
சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்;
இன்ன வேலைவாய், முனிவன் எய்தினான்.*

    இனைய அண்ணலும் - (பரதன்) தம்பியாகிய சத்துருக்கனனும்; உன்ன
நைந்து நைந்து உருகும் அன்புகூர் அன்னைதாளில்
- நினைக்க மனம்
கரைந்து கரைந்து, அன்பு மிகுந்த தாயாகிய கோசலையின்திருவடிகளில்;
வீழ்ந்து - விழுந்து; சொன்ன நீர்மையால் - பரதன் சொல்லியதன்மை
போலவே தொழுது அழுது சொல்லி மயங்கினான்; இன்ன வேலைவாய் -
இத்தகையசமயத்தின் கண்; முனிவன் - வசிட்ட முனிவன்; எய்தினான் -
அந்த இடத்துக்குவந்து சேர்ந்தான்.

     ‘சொன்ன நீர்மையால்’ என்பதனால் பரதன் புலம்பிய போதே
இளையவனும் புலம்பினான்என்க. இருவர்க்கும் இராமனைப் பிரிந்த
துக்கமும், தந்தையை இழந்த துக்கமும்ஒன்றே.                     120