பரதன் துயரதத்தால் அழுதல்  

2233.இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனா,
படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான்,
தடுக்கல் ஆகலாத் துயரம் தன்னுளே
துடிக்க, விம்மி நின்று அழுது சொல்லுவான்;

     (பரதன்) வாள் அரா - கொடி பாம்பானது; இடிக்கண் - இடி
இடிக்கின்றகாலத்திடத்து; இடைவது ஆம் எனா - அஞ்சி நடுங்கிப்
பின்னடைவு அடைதல் போல என்றுசொல்லும்படி; படிக்கண் வீழ்ந்து -
மண்ணிடத்து  விழுந்து; அகம் துடிக்கும்நெஞ்சினான் - உள்ளே
துடிக்கின்ற மனம் உடையனாய்; தடுக்கல் ஆகலாத் துயரம் -பிறரால்
நிறுத்த வொண்ணாத துன்பம்; தன்னுளே துடிக்க - தன்னுள்ளேயே
தன்னைப்பதைபதைக்கச் செய்ய; விம்மி நின்று அழுது சொல்லுவான் -.

     இடியொலி கேட்டவழி பாம்பு அஞ்சி உயிர்விடும். அதுபோலப்
பரதனும் வசிட்டன்சொற்கேட்ட துணையான் அஞ்சி நடுங்கி மூர்ச்சித்தான்
என்க.  பரதன் துயரதம் பிறரால்ஆற்றுதற்கரியது.                   132