பரதன் புலம்பிக் கூறுதல் 2234. | ‘உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே? இரவிதன் குலத்து, எந்தை முந்தையோர் பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்; அரசு செய்யவோ ஆவது ஆயினேன்! |
‘ ‘இரவி தன் குலத்து- சூரிய வம்சத்தில்; எந்தை முந்தையோர்- என் தந்தை, மற்றும் முன்னோர்களது; பிரத பூசனைக்கு - பிரேத வழிபாடு செய்வதற்கு; உரிய-; பேறு இலேன் - பாக்கியம்பெறாதவனாக உள்ளேன்; (ஆனால்) அரசு செய்யவோ - (அந்தத் தந்தை முன்னோர்களது) அரசினைப் பெற்று நடத்தவோ; ஆவது ஆயினேன் - பொருந்துவதானேன்; உரைசெய் மன்னர் - புகழ்பெற்ற அரசர்கள்; என்னில் - என்னைக்காட்டிலும்; மற்று யாவர் - வேறுயார் உளர்?’ தனக்குத் தானேநொந்து கூறிக்கொண்டு, தன்னை இகழ்ந்து புலம்புகிறான். ‘இரவி தன்குலத்துஎந்தை, முந்தையோர்களில், உரைசெய் மன்னர் என்னில் மற்று யாவர்’ எனவும் கூட்டிப் பொருள்உரைக்கலாம். பிரேத பூசனை செய்யுங்கால், தந்தையொடு முன்னோர்களையும் இணைத்தே செய்யவேண்டுதலின் ‘எந்தை முந்தையோர் பிரேத பூசனை’ என்று கூட்டுவதில் தவறில்லை. ‘முன்னோர்க்குக்கடன்செய்யும் தகுதியற்ற யான் அவர்களது உரிமையைப் பெறுவது’ எவ்வாறு பொருந்தும்’ என்பது பரதன் அவலவுரையாம். ‘ஏ’ காரம் வினாப் பொருளில் வந்துள்ளது. 133 |