2235. | ‘பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம் தா இல் மன்னர், தம் தரும நீதியால் தேவர் ஆயினார்; சிறுவன் ஆகியே, ஆவ! நான் பிறந்து அவத்தன் ஆனவா? |
‘பூவில் நான்முகன் புதல்வன்!- (திருமாலின் திருவுந்தித்) தாமரையில் தோன்றிய பிரமதேவனது புதல்வனாகிய வசிட்டனே!; ஆதி ஆம் தாஇல் மன்னர் - சூரிய குலத்து முன்னோர்களாகிய குற்றமற்ற அரசர்கள்; தம்தரும நீதியால் - தாம் செய்த அறத்தின் முறைமையால்; தேவர் ஆயினார் - (அனைவராலும்தொழப்படுகின்ற) தேவர்களாக ஆயினார்; நான் -; பிறந்து சிறுவன் ஆகியே - பிறந்துசிறுவனாக இருக்கும் பொழுதே; அவத்தன் ஆனவா! - வீணாகப் போய்விட்டபடி என்னே!; ஆவ - ஐயோ!’ நான்முகன் புதல்வன் - பிரமபுத்திரனாகிய வசிட்டன் என்று அண்மைவிளியாகக் கொள்க. “வரசரோருகன் மகன்” (184) என்பது ஒப்புநோக்குக. இனி, காசிபன் எனின் காசிபன் முனிவன் ஆதல்அன்றி அரசன் ஆதல் இல்லை; அன்றியும் அவன் பரதன் குலத்து முன்னோன் எனப்படுதற்கும்இயைபின்மை உணர்க. ‘ஆவ’ என்பது இரக்கக் குறிப்புச் சொல். “சாவ முன்னாள் தக்கன்வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி, ‘ஆவ’ என்று அவிதா இடும் நம்மவர் அவரே” என்னும்திருவாசகப் பாடலையும் இங்குக் (திருவா. திருச்.4) கருதுக. 134 |